லெராய் வில்சன் & முல்லை அரசு
"முதன் முதல் அழுத சிநேகிதன் மரணம்"- இவ்வரிகளின் ஆழம் கடந்த மாதம் தான் புரிந்தது... நம்முடன் சுக துக்கங்களில் பங்கேற்ற நம் உயிர் நண்பர்களை ஜீவன் அற்ற சடலமாக பார்ப்பது கொடுமை... அந்த கொடுமை கடந்த மாதம் எனக்கு நடந்தது...அவர்களுடைய உடல் பிரேத பரிசோதனை செய்த பின் துணி போல கண்ணாடி பேழைக்குள் கிடத்த பட்டிருந்தாலும் எழுந்து, வா மனோஜ் என்று கட்டிபிடிக்க மாட்டார்களா என்று ஏங்கினேன்...
" வானுலகை பார்க்கும் ஆசையினால்
ஆதித்தான் அஸ்தமனம் அடைந்தான்
உலகை கலி என்னும்
காரிருள் சூழ்ந்து கொண்டது"
இப்படித்தான் திருவாலங்காடு செப்பேடுகளில் ராஜராஜனின் தமையன் ஆதித்த கரிகாலனின் மரணம் குறிபிடப்பட்டுள்ளது. தோரயமாக அவனுக்கும் 21 பிரியாயம் தான் இருக்கும் மரணிதின் போது...இதே வயது தான் என் lerroy மற்றும் முல்லைக்கும்...
எத்தனை காலமானாலும் உங்களுடன் வாழ்ந்த இந்த 3+ வருடங்கள் நீங்காது என் நினைவை விட்டு...
கார்க்கி சொன்னது போல ஒருவருடைய வாழ்க்கை என்பது அவர்கள் உயிரோடு உள்ளவரை மட்டுமே அல்ல...அவர்களுடைய நினைவுகள் அவர்களோடு தொடர்புடைய, வாழ்ந்த எவரேனும் ஒருவருக்கு வரும் வரை அவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அப்படி பார்த்தால் இந்த 1 மாதமும் உங்கள் நினைவு வராத நாட்களே இல்லையடா எங்களுக்கு... ஒரு மாதம் என்ன,உங்களோடு வாழ்ந்த ஒவ்வொருவரும் உயிரோடு உள்ளவரை உங்கள் நினைவுகள் அவர்களை விட்டு போகாதுடா.
லெராய் வில்சன்
இந்த பெயரை பெரும்பாலும் பலரும் தவறாக உச்சரிப்பதே வழக்கம்.உன் குணம் வெகு அரிதுடா... யாரையும் மனம் நோக வைக்காத குணம். எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாக சிந்தித்து செயல்படுவாய். அளவு கடந்த பொறுமை உனக்கு உண்டு என்று உன்மேல் எனக்கு வருத்தம் உண்டு.ஆனால் உன் வாழ்க்கையில் அந்த பொறுமை எங்கே போனது. தீர்கமான யோசனை எங்கே போனது...வகுப்பிற்கு தினமும் தாமதமாக வரும் நீ வாழ்கையில் மட்டும் சீக்கிரம் போனது ஏன் ?
எட்டாம் வகுப்பில் இருந்தே பல இடங்களில் என்னுடன் துணையாக வந்துள்ளாய் நீ...இப்போது மட்டும் பாதியில் விட்டு சென்றது ஏன்...29 ஆம் ஊருக்கு சேர்ந்து போகலாம் என்று சொன்ன நீ 26 ஆம் தேதியே வானுலகம் சென்றது என்ன நியாயம்...
முல்லை அரசு
அருமையான தமிழ் பெயர்... உன்னுடைய திறமைகளே தனிதான்...அது மிகச்சிலருக்கே வாய்ப்பது. உன்னை போல நடனமாட ஒருவன் பிறந்துதான் வர வேண்டும். அது மட்டுமா, உன் ஓவிய திறமையும் அலங்காரம் செய்யும் திறமையும் யாருக்கு வரும்.
இத்தனை திறமைகளை கண்ட இறைவன் உன்னை தனக்கு அருகில் வைத்து கொள்ள விரும்பினாரோ என்னமோ... உன்னை போல நல்ல உள்ளம் கண்டிப்பாக நன் இதுவரை சந்தித்த எவருக்கும் இல்லை. ஆனால் எளிதாக ஏமாறுவதும் அவசரமாக நீ எடுக்கும் முடிவுகளுமே உன் மீது என் வருத்தம்.
கண்டிப்பாக lerroy திறமைக்கு ஒரு தலை சிறந்த IIM கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. CAT முடித்து நீ போன் செய்தது இன்னும் என் காதுகளில் கேட்கிறது.
அதே போல முல்லை PLC படித்து பெரிய ஆளாக வருவான் என்று நம்பினேன்....
இரண்டு பேருக்கும் எக்கச்சக்க கனவுகள். கனவுகள் கனவுகளாகவே போய்விட்ட வருத்தம் நமக்கு...
பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலன் வாயிலாக கல்கி சொல்வார் "இளம் பிராயத்திலே மரணமடைவோர் எப்போதும் மற்றவர் மனதிலே இளமையாக இருப்பர்" என்று... ஆமாம் டா, என்றுமே எங்கள் மனதில் உங்களுக்கு 21 வயது தான்... உங்களுக்கு மூப்பே கிடையாதுடா.
என் பிள்ளைகளுக்கு உங்கள் பெயர் வைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்... ஆனால் அதற்கு சூழ்நிலைகள் இடம் கொடுக்குமா என்று தெரியவில்லை. பெயர் வைத்தாலும் இல்லை என்றாலும் என் பிள்ளைகள் lerroy போல் முல்லை போல் வளர வேண்டும் என்றே நினைக்கிறேன்...
உன் நினைவாக உன் குடும்பத்தினர் ஆரம்பித்த அறக்கட்டளை சிறப்பாக வர இறைவனை வேண்டுகிறேன் லெராய்.
உங்கள் இருவரின் வாழ்க்கையும் விதையாக விதைக்கப்பட்டுள்ளது.
அவை உங்கள் நண்பர்கள் வாழும் வரை வீழாது. பல லெராய்களும் முல்லைகளும் உருவாவார்கள். அவர்கள் நல்ல ஆரோக்கியம் பெற்று 100 ஆண்டு வரை உங்கள் ஆசியோடு வாழ்வார்கள்...




No comments:
Post a Comment